கதை சொல்லும் கலையில் புதிய அத்தியாயம் – சிறுகதை மற்றும் வானொலி நாடகப் பயிலரங்கில் திரண்ட 100 படைப்பாளிகள்.
சுங்கை பட்டாணி, நவம்பர் 28 –

மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் புதிய தலைமுறை எழுத்தாளர்களையும், வானொலி நாடகக் கலைஞர்களையும் உருவாக்கும் நோக்கில், கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த ஒருநாள் சிறுகதை மற்றும் வானொலி நாடகப் பயிலரங்கு’ சுங்கை பட்டாணியில் உள்ள ஹோட்டல் ஸ்ரீ மலேசியாவில் மிக எழுச்சியுடன் நடைபெற்று முடிந்தது.
இயக்கத்தின் தலைவர் டாக்டர் உதயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 100 படைப்பாளிகள் ஆர்வத்துடன் பங்கேற்றுத் தங்களின் படைப்பாற்றலுக்குப் மெருகேற்றிக் கொண்டனர்.

புதிய தலைமுறையினருக்குப் பயிற்சிப் பாசறை.
கெடா தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் மேனாள் தலைவர் முனைவர் சச்சிதானந்தம் இப்பயிலரங்கை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். சிலாங்கூர், பினாங்கு, பேராக், ஜொகூர் மற்றும் கெடா ஆகிய மாநிலங்களிலிருந்து வருகை தந்திருந்த வளரும் எழுத்தாளர்கள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களுக்கு இப்பயிலரங்கு ஒரு சிறந்த கற்றல் களமாக அமைந்தது.
சிறுகதை, வானொலி கதை மற்றும் நாடக நுணுக்கங்கள்.
காலை முதல் மாலை வரை நடைபெற்ற இப்பயிலரங்கில், இலக்கியம் மற்றும் ஒலிபரப்புத் துறையின் நுணுக்கங்கள் பங்கேற்பாளர்களுக்குப் படிப்படியாகக் கற்றுக்கொடுக்கப்பட்டன.
ஒரு வாழ்வியல் அனுபவத்தை எவ்வாறு சுவாரசியமான கதைக்கருவாக மாற்றுவது, கதாபாத்திர வடிவமைப்பு, தொடக்கம் முதல் உச்சக்கட்டம் (Climax) வரையிலான கதை நகர்வு மற்றும் வாசகர்களைக் கவரும் மொழிநடை குறித்து ஆழமாகப் பயிற்றுவிக்கப்பட்டது.

வானொலிக் கதைகள் (Radio Stories): வாசிப்பு அனுபவத்திற்கும், செவிவழி அனுபவத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் இதில் விளக்கப்பட்டன.
நேயர்களின் மனக்கண்ணில் காட்சிகளை விரியச் செய்யும் வகையில் எளிய, உணர்வுப்பூர்வமான சொற்களைக் கொண்டு வானொலிக் கதைகளை வடிவமைக்கும் முறைகள் கற்றுத்தரப்பட்டன.

வானொலி நாடகம் மற்றும் தொடர் நாடகம், காட்சி ஊடகங்களைப் போலன்றி, வெறும் குரல் ஏற்ற இறக்கங்கள், வசன உச்சரிப்பு மற்றும் பின்னணி ஒலிகள் (Sound Effects) மூலமாகவே ஒரு கதையை உயிரோட்டத்துடன் நேயர்களிடம் கொண்டு சேர்ப்பது எப்படி என்பது குறித்துச் செயல்முறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இப்பயிற்சி அமர்வுகளில் மின்னல் எஃப்.எம். வானொலியைச் சேர்ந்த காயத்ரி கண்ணம்மா, சிறுகதைப் பிரிவு பொறுப்பாளர் நளினி அச்சுதன் மற்றும் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் பவானி பழனியப்பன் ஆகியோர் கலந்துகொண்டு, இன்றைய வானொலி நேயர்களின் ரசனைக்கேற்பப் படைப்புகளை உருவாக்கும் உத்திகளைப் பகிர்ந்து கொண்டனர்.
மேலும், ஆசுகவி கலைமாமணி கே.எஸ். மணியம், நாடகத் துறைக்கான நுணுக்கங்கள், குரல் வளப் பாதுகாப்பு மற்றும் நடிப்புத் திறன் குறித்துத் தனது அனுபவங்களின் வாயிலாக விரிவாக எடுத்துரைத்தார்.
பயிலரங்கின் பயன்கள் மற்றும் இலக்கிய ஊக்கம் இப்பயிலரங்கின் வாயிலாக, மாணவர்களும் இளம் படைப்பாளிகளும் தங்களின் கற்பனைத் திறனைச் செம்மைப்படுத்தி, அவற்றை முறையான இலக்கிய வடிவங்களாக மாற்றும் தன்னம்பிக்கையைப் பெற்றுள்ளனர். குறிப்பாக, வானொலி ஊடகத்தில் படைப்புகளை வழங்குவதற்கான தொழில்நுட்ப மற்றும் கலை ரீதியான புரிதல் அவர்களுக்குக் கிடைத்துள்ளது.
பயிலரங்கின் நிறைவு விழாவில், தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான் ஸ்ரீ சோமா அறவாரியத்தின் மொழி, கலை, கலாச்சார நிர்வாகச் செயலாளர் பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்வை நிறைவு செய்து வைத்தார்.
அப்போது பேசிய அவர், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் தொடர்ந்து இலக்கியப் போட்டிகளை நடத்தி வருகிறது. அதன் அடுத்த கட்டமாக, வரும் ஆண்டு முதல் தேர்ந்தெடுக்கப்படும் மூன்று சிறந்த உள்ளூர் படைப்புகளுக்குத் தலா 10,000 ரிங்கிட் ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது, என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு பங்கேற்பாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
நன்றியுரை
நிகழ்வின் இறுதியில் நன்றியுரை ஆற்றிய கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் தலைவர் டாக்டர் உதயகுமார், இளைய தலைமுறை மற்றும் வருங்கால எழுத்தாளர்களுக்கு இப்பயிலரங்கு ஒரு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது எனப் பெருமிதம் தெரிவித்தார். மேலும், இவ்விழா வெற்றிபெற உறுதுணையாக இருந்த தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம், மின்னல் எஃப்.எம். வானொலி, தொழிலதிபர் ஆ.சு. மலையரசன், புரோடுவா முனியாண்டி, டாக்டர் சச்சி, லங்காவி கருணாநிதி உள்ளிட்ட நன்கொடையாளர்களுக்கும், ஆர்வத்துடன் பங்கேற்ற அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.




