பாவலர்களின் சங்கமம் வரலாற்றுத் தருணமானது!
ஜார்ஜ்டவுன், நவ. 20 –

பினாங்கு, ஜாலான் சுங்கை தேசிய வகை இராமதாசர் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற மகாகவி சுவாமி இராமதாசரின் 110-ஆவது பிறந்தநாள் விழா, பாவலர்கள் மற்றும் கவிஞர்களின் சங்கமத்தால் ஒரு வரலாற்றுத் தருணமாக அமைந்தது.

தேசிய வகை இராமதாசர் தமிழ்ப்பள்ளி மற்றும் மலேசிய முத்தமிழ்ப் பெரும்புலவர் இராமதாசர் மன்றம் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் நடந்த இவ்விழாவில், தமிழ் இலக்கிய ஆளுமைகள் ஒன்றுகூடி மகாகவியின் புகழ்பாடியது அரங்கையே கவிதை மழையில் நனைய வைத்தது.

விழா ஏற்பாட்டாளர் பாவலர் பெ.க. நாராயணன் முன்னெடுப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாவலர் முத்து பாண்டியன், பாவலர் கோவதன், தமிழறிஞர் இர. திருச்செல்வம், செந்துறைக் கவிஞர் சோலைமுருகன், பேராசிரியர் மா. இரவிச்சந்திரன், கவிஞர் ஃபிரான்சிஸ், எழுத்தாளர் முருகு மாதவன், எழுத்தாளர் மரியசூசை மற்றும் பாவலர் அம்பிகாபதி ஆகிய இலக்கியச் சுடர்கள் கலந்துகொண்டு விழாவிற்குப் பெருமை சேர்த்தனர்.

இவர்களின் வருகையும், கவிதைப் பங்களிப்புகளும் இளைய தலைமுறை மாணவர்களிடையே தமிழ் இலக்கியத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்திருந்தன.

இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினரும், பினாங்குத் தமிழ்ப்பள்ளிகள் சிறப்புக்குழுத் தலைவருமான டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு அவர்கள் நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். அவருக்குப் பாவலர் கோவதன் இனிய வாழ்த்துக் கவிதை வடித்துப் பாடி வரவேற்பளித்தது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.
தமது உரையில் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு அவர்கள், நம் இனம் வாழ வேண்டுமானால், நம் வரலாறும் மொழியும் காக்கப்பட வேண்டும். சமுதாயத்திற்குப் பாடுபட்ட மகாகவி சுவாமி இராமதாசர் போன்றோருக்கு விழா எடுப்பது நம் தலையாய கடமையாகும். அவரது வரலாறு வியக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது என்று புகழாரம் சூட்டினார். மேலும், இன்று பல தமிழ்ப்பள்ளிகளுக்குப் பொருத்தமற்ற பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், பள்ளிகளுக்கு வரலாற்றுக் குறியீடு கொண்ட பெயர்களும், நம் வரலாற்றுத் தலைவர்களின் பெயர்களும் சூட்டப்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.
முன்னதாக, இராமதாசர் மன்ற ஆலோசகர் பேராசிரியர் மா. இரவிச்சந்திரன் உரையாற்றுகையில், “தமிழர் வாழ்வியலில் 64 கலைகள் இணைந்துள்ளன. அந்த வகையில், சுவாமி இராமதாசர் 64 கலைகளில் 51 கலைகளைக் கற்றுத் தேர்ந்த மாமேதை” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் து. வினோத் தனது உரையில், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு அவர்கள் தமிழ்ப்பள்ளிகளின் மீது சிறப்பு அக்கறை செலுத்தி, பள்ளியை மேம்பாட்டு வழியில் கொண்டு செல்கிறார். சுவாமி இராமதாசர் பள்ளியில் அவரின் 110-ஆவது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவது பள்ளிக்கும் ஒட்டுமொத்தத் தமிழ் சமூகத்திற்கும் கிடைத்த பெருமையாகும் என்றார்.
விழாவின் சிறப்பம்சமாகச் சுவாமி இராமதாசரின் வரலாற்றுக் குறிப்புகள் காணொளியாகத் திரையிடப்பட்டன. நிறைவாக, பாவலர்களின் முன்னிலையில் பள்ளியில் நடத்தப்பட்ட இராமதாசர் கட்டுரைப் போட்டி, வண்ணம் தீட்டும் போட்டி மற்றும் கவிதைப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன. ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் திரளாகப் பங்கேற்ற இவ்விழா, இலக்கிய வரலாற்றில் நீங்கா இடம்பிடித்தது.




