கல்விப் பயணத்திற்குக் கைகொடுத்த மடிக்கணினிகள் – ஆளுமைகளின் சேவையைப் போற்றிய பட்டர்வொர்த் விழா.
பட்டர்வொர்த், நவ. 23 –

பொருளாதாரச் சவால்களுக்கு இடையே கல்வியைத் தொடரும் மாணவர்களின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் நோக்கில், பினாங்கு தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் ஏற்பாடு செய்த சிறப்பு நிகழ்ச்சி பட்டர்வொர்த்தில் உள்ள டத்தோ ஹாஜி அஹ்மத் படாவி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர்.
மாணவர்களின் கல்விக்குக் கைகொடுத்த மடிக்கணினி, சீருடைப் பற்றுச் சீட்டு
இன்றைய தொழில்நுட்பக் கல்விச் சூழலில் மாணவர்களுக்கு மடிக்கணினி என்பது தவிர்க்க முடியாத தேவையாக மாறியுள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு, பொருளாதாரப் பின்னடைவு உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

இது அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தி, நவீன உலகிற்கு ஏற்பத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளப் பெரும் துணையாக அமையும்.
அதேபோல், பள்ளிச் சீருடைகளுக்கான பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டது பெற்றோரின் பொருளாதாரச் சுமையைக் குறைத்ததுடன், எந்தத் தாழ்வுணர்வுமின்றித் தன்னம்பிக்கையுடன் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல வழிவகுத்தது.

இயக்கத்தின் தலைவர் திரு. செ. குணாளன் தலைமையிலான இம்முயற்சி, அடுத்த தலைமுறையின் கல்வி வாய்ப்புகளை உயர்த்தும் ஆக்கப்பூர்வமான சமூகப் பணியாகப் பார்க்கப்படுகிறது.
கல்வி, சமூக சேவையில் மிளிரும் ஆளுமைகள்
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட ஆளுமைகளின் கல்வி மற்றும் மக்கள் நலப் பணிகள் விரிவாகப் போற்றப்பட்டன.
குறிப்பாக, தமிழ்மொழி, தமிழ்க் கல்வி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பேராசிரியர் டி.எஸ். டாக்டர் அஜேந்திரன் அவர்களின் ஆழமான புலமையும் நீண்ட அனுபவமும், மாணவர்களின் சிந்தனை மேம்பாட்டிற்கும் சமூக அறிவு வளர்ச்சிக்கும் ஊன்றுகோலாகத் திகழ்வதாகக் குறிப்பிடப்பட்டது.
அதேபோன்று, சமூகத்தின் தேவைகளை உணர்ந்து எதிர்பார்ப்புகளின்றி மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு வரும் கடார கர்ணன் எனப்படும் டாக்டர் சின்னையா அவர்களின் சேவை மனப்பான்மையும் பாராட்டுக்குரியதாக அமைந்தது. இவர்களுடன் டாக்டர் ஜொபினா நாயுடு, டத்தோ தேவேந்திரன் உள்ளிட்ட ஆளுமைகளின் பங்களிப்புகளும் சமூக வளர்ச்சிக்கு வலுசேர்ப்பதாகப் பேசப்பட்டது.
முதலீடான கல்வி உதவி
கல்வி உதவி என்பது எதிர்காலச் சமூகத்தின் மீது செய்யப்படும் முதலீடு என இயக்கத்தின் துணைத் தலைவர் மா. முனியாண்டி குறிப்பிட்டார், சமயமும் கல்வியும் இரு கண்கள் போன்றவை என ஏற்பாட்டுக்குழுத் தலைவர் டாக்டர் ச. குமரேசன் வலியுறுத்தினார். கல்வி, பண்பாடு மற்றும் சமூக ஒற்றுமையை ஒருங்கிணைத்த இந்நிகழ்ச்சி, இளைய தலைமுறையினருக்குத் தன்னம்பிக்கையூட்டும் முன்னுதாரணமாக அமைந்தது.
மேஜர் அட்ணான் மாணவர்களுக்கான பள்ளி சீருடைக்கான பற்றுச் சீட்டுகளை வழங்கினார். டாக்டர் மாறன், மு.வீ.மதியழகன், டத்தோ இராமசந்திரன் , டத்தோ தேவேந்திரன், டாக்டர் உதயக்குமார் நிகழ்ச்சியின் வெற்றிக்கு துணை நின்றனர்.




