புற அழகைத் தாண்டி பெண்களின் ஆளுமைக்கும் கலாச்சாரப் பெருமைக்கும் மகுடம் சூட்டிய சுங்கை பட்டாணி தீபாவளி விழா!
சுங்கை பட்டாணி, நவம்பர் 22-

பாரம்பரிய உடையான சேலையின் மகத்துவத்தை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும், நவீன காலப் பெண்களின் அறிவாற்றல் மற்றும் ஆளுமைத் திறனை வெளிப்படுத்தும் உயரிய மேடையாகவும் சுங்கை பட்டாணி காந்தி மண்டபத்தில் ‘சேலை அழகுராணிப் போட்டி’ மற்றும் ‘இசை சங்கமம்’ மிக எழுச்சியுடன் நடைபெற்றது.
திருமதி செல்வி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, வழக்கமான அழகுப் போட்டிகளைப் போல் வெறும் புறத் தோற்றத்தை மட்டும் முன்னிறுத்தாமல், பெண்களின் தன்னம்பிக்கை, தமிழ் கலாச்சார அறிவு மற்றும் சமூகப் பார்வையை மதிப்பிடும் களமாக அமைந்தது. பட்டு முதல் கைத்தறி வரை வண்ணமயமான சேலைகளில் வலம் வந்த மங்கையர், நடுவர்களின் கேள்விகளுக்குத் துணிச்சலாகவும் அறிவுப்பூர்வமாகவும் பதிலளித்து, பாரம்பரியமும் நவீன சிந்தனையும் இணைந்த தங்களின் ஆளுமையை நிரூபித்தனர்.

இவ்விழாவின் மற்றுமொரு சிறப்பம்சமாக, சமூகத்தில் தடம் பதித்த பெண்களை ஊக்குவிக்கும் விதமாகத் திருமதி மகேஸ்வரி சந்திரன் மற்றும் சுபாஷினி செல்வா ஆகிய இருவருக்கும் ‘சாதனையாளர் விருது’ வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

இன்னிசைக் கலைஞர்களின் கானமும், பொதுமக்களின் உற்சாக ஆரவாரமும் அரங்கைத் தீபாவளி கொண்டாட்டத்தில் ஆழ்த்திய நிலையில், சமுதாய நலன் மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் ‘கடார கர்ணன்’ டாக்டர் சின்னையா நாயுடு (தலைமை நிர்வாக அதிகாரி, Tabitha Offshore & Marine Sdn Bhd) மற்றும் டாக்டர் திருமதி ஜோபினா நாயுடு (PJK, PJM – நிர்வாக இயக்குநர்) ஆகியோரின் தாராளப் பங்களிப்பு இவ்விழாவின் வெற்றிக்கு முதுகெலும்பாக அமைந்தது.

நில மேம்பாட்டாளர் டாக்டர் மாறன், மானமிகு மு.வீ. மதியழகன், டத்தோஸ்ரீ சந்திரன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்த இந்நிகழ்வு, சுங்கை பட்டாணியின் கலை, கலாச்சார மற்றும் மகளிர் மேம்பாட்டு வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாகப் பதிவாகியுள்ளது.




