2027 டிசம்பர் 11 கார்த்திகை தீபம் ஏற்றுவோம் – முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி சூளுரை.
ஜார்ஜ் டவுன்,நவ 28 –

தமிழ்நாட்டின் இந்துக்களின் விவகாரங்களில் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் தலையிடத் தேவையில்லை என்று பினாங்கு பாகான் டாலாம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி சூளுரைத்தார்.
அதே வேளையில் பினாங்கு தண்ணீர்மலை (Waterfall Hilltop) முருகன் ஆலயத்தில் ஆர்.எஸ்.என் ராயர் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முன்வர வேண்டும் என்றும் உரிமை (URIMAI) கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சத்தீஸ் முனியாண்டி சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் திருப்பரங்குன்றம் மலையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக இந்துக்களின் விவகாரங்களை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள் எனக் குறிப்பிட்டுள்ள அவர், அதில் ஆர்.எஸ்.என். ராயர் தலையிட வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மலேசியா மற்றும் குறிப்பாக பினாங்கு மாநில இந்துக்கள் முருகப்பெருமானின் அருளைப் பெறும் வகையில், எதிர்வரும் 2027-ஆம் ஆண்டு கார்த்திகை தீபத் திருநாளன்று பினாங்கு தண்ணீர்மலை உச்சியில் அமைந்துள்ள ஆலயத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என ஆர்.எஸ்.என். ராயருக்கு அவர் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியம் (PHEB) இந்த நடவடிக்கையை மேற்கொள்ளத் தவறினால், 2027-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி ‘உரிமை’ கட்சி சார்பில் தாங்களே தண்ணீர்மலை ஆலயத்தில் கார்த்திகை தீபத்தை ஏற்றுவோம் என சத்தீஸ் முனியாண்டி உறுதியளித்துள்ளார். இது தங்களது வாக்குறுதி என்றும் அவர் தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.




