தீபாவளியை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்பளிப்பு – ரொக்கப் பணம் வழங்கிச் சிறப்பித்த சுரேந்திரன் – கங்கா ஸ்ரீ தம்பதியினர்!
பட்டர்வொர்த், நவ. 12 –
தீபாவளித் திருநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்கள் மகிழ்ச்சியுடன் பண்டிகையைக் கொண்டாடும் வகையில், தொழிலதிபர்களான திரு. சுரேந்திரன் ரவிச்சந்திரன் (MP MAL Road and Building Construction) மற்றும் அவரது துணைவியார் திருமதி கங்கா ஸ்ரீ மனோகரன் (Cyra Resources) ஆகியோர் இணைந்து சிறப்புத் தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

தாமான் சந்திக்கில் அமைந்துள்ள திரு. சோ.மனோகரன் இல்லத்தில் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சிறப்பு நிகழ்ச்சியில் 40-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் தீபாவளி அன்பளிப்புப் பொதிகளுடன் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டன. மேலும், வருகை தந்த அனைவருக்கும் உணவு தயார் செய்யப்பட்டு அன்புடன் பரிமாறப்பட்டது. இது ஒரு சிறிய தீபாவளிப் பெருவிழா கொண்டாட்டம் போல் மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. சுரேந்திரன் ரவிச்சந்திரன் அவர்கள், அனைவருக்கும் தனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், இல்லாதவர்களுக்குக் கொடுத்து மகிழ்வதே உண்மையான பண்டிகைக் கொண்டாட்டமாகும். இறைவன் அருளால் ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற தீபாவளி அன்பளிப்பு நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று குறிப்பிட்டார்.

அவரைத் தொடர்ந்து பேசிய திருமதி கங்கா ஸ்ரீ மனோகரன் இந்த இனிய தீபாவளி நன்னாளில் இத்தகைய நற்பணியைச் செய்வதில் எங்களுக்குப் பெருமகிழ்ச்சி. இனி வரும் ஆண்டுகளில் இன்னும் பிரமாண்டமாகவும் சிறப்பாகவும் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்துவோம் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் நிறைவாகத் திரு. மனோகரன் அவர்கள் வருகை தந்திருந்த அனைவருக்கும் தனது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். அப்போது அவர், “இது போன்ற மக்கள் நலன் சார்ந்த சமூகப் பணிகளை நான் தொடர்ந்து செய்து வருகிறேன்.
எதிர்காலத்திலும் மக்களுக்காக எதையும் செய்ய நான் எப்போதும் தயாராக இருக்கிறேன் என்று உறுதியளித்தார்.




